அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட சிறுகண் பீளை செடியின் நன்மைகள் குறித்து பார்ப்போம். சிறுகண் பீளை செடி சாலை, ஏரிக்கரை ஓரங்களில் வளரக்கூடியது. சிறுகண் பீளைக்கு பொங்கல் பூ என்ற பெயரும் உண்டு. சிறுநீரை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. கற்களை கரைக்க கூடியது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.
நோய் கிருமிகளை அகற்ற கூடியது.சிறுகண் பீளை வேரை பயன்படுத்தி கழிச்சல், சீதக் கழிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வேர், கோரைக் கிழங்கு, சோம்பு, பனங்கற்கண்டு. வேரை நன்றாக சுத்தம் செய்து 3 கிராம் வரை எடுக்கவும். அரை ஸ்பூன் கோரைக் கிழங்கு பொடி, அரை ஸ்பூன் சோம்பு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர வயிற்றுப்போக்கு குணமாகும். கழிச்சல், சீத கழிச்சல், உஷ்ணத்தால் ஏற்படும் அடி வயிறு கடுப்பு சரியாகும்.
சிறுகண் பீளை சாறு பயன்படுத்தி வெள்ளைப்போக்கு பிரச்சனைக்கு மருந்து தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: சிறுகண் பீளை பூ, இலை, மோர். இலை மற்றும் பூவை நன்றாக அரைத்து எடுத்து சாறு எடுக்கவும். 20 மில்லி சாறுடன் அரை டம்ளர் புளிப்பில்லாத மோருடன் சேர்த்து கலக்கவும். இதை குடித்தால் வெள்ளைப்போக்கு பிரச்சனை சரியாகும். பால்வினை நோய் குணமாகும். சிறுகண் பீளை செடியை பயன்படுத்தி சிறுநீரக கற்களை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒருபிடி அளவுக்கு சிறுகண் பீளை பூ, இலை, வேர் எடுக்கவும். இதில் ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்தால் சிறுநீரக கற்களை உடைக்கும் அற்புத மருந்தாகிறது. சிறுநீர் தாரையில் ஏற்படும் வலி, ரத்தக் கசிவு குணமாகும். சிறுநீரக கோளாறுகளை சரிசெய்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது.
சிறுகண் பீளை பூக்களை பயன்படுத்தி தலைவலி, உயர் ரத்த அழுத்தத்துக்கான தேனீர் தயாரிக்கலாம். ஒருபிடி அளவுக்கு பூக்கள் மற்றும் இலைகள் எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால், முதுகு வலி சரியாகிறது. வீக்கத்தை குறைக்கிறது. வலியை தணிக்கிறது. காய்ச்சலை போக்கும் தன்மை கொண்டது. கொழுப்பு சத்தை குறைக்கும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

Post a Comment